தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசுவாமி தனது தேர்தல் ஆணையப் பணியை மட்டுமே செய்ய வேண்டும், அரசியல் முதலாளிபோல நடந்துகொள்ளக் கூடாது என்று நடுவன் சட்ட அமைச்சர் ஹன்ஸ் ராஜ் பரத்வாஜ் கூறியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் இன்று துவங்கிய மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பரத்வாஜ் இவ்வாறு கூறியுள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்களில் ஒருவரான தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று பரிந்துரைத்து கோபாலசுவாமி அனுப்பிய கோப்பு தனக்கு வந்துள்ளதாகவும், அதில் புதிதாக என்ன உள்ளது என்பதை இதற்கு மேல்தான் பார்க்கப் போவதாகவும் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையராக நவீன் சாவ்லா நியமிக்கப்பட்டதிலிருந்தே தலைமைத் தேர்தல் ஆணையத்தில் உள் சண்டை நடந்துவருவதாகக் கூறிய அமைச்சர் பரத்வாஜ், “தேர்தல் ஆணையத்தின் வேலை வாக்காளர் பட்டியலை தயாரிப்பதுதானே தவிர, அடுத்தவர் மீது குற்றச்சாட்டுப் பட்டியலைத் தயாரிப்பது அல்ல” என்று கூறினார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் அளித்த பரிந்துரையின் மீது முடிவு ஏதும் எடுக்கப்பட்டுள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, முடிவு எப்போது எடுக்கப்படுகிறதோ அப்போது அது உங்களுக்குத் தெரியப்படுத்தப்படும் என்று பரத்வாஜ் பதிலளித்தார்.
தற்பொழுது தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ள கோபாலசுவாமியி்ன் பதவிக்காலம் முடிவிற்கு வருவதால், அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனம் குறித்து அரசு முடிவு செய்துவிட்டதா என்று கேட்டதற்கு, அதற்கான ஆலோசனை துவங்கியுள்ளது என்றும், உரிய நேரத்தில் அதற்கான அறிவிப்பு வெளிவரும் என்றும் பதிலளித்த பரத்வாஜ், கோபாலசுவாமியின் பரிந்துரை எந்த விதத்திலும் நவீன் சாவ்லாவின் பணி வாழ்வைப் பாதிக்காது என்றும் கூறினார்.
திறமையின் அடிப்படையிலேயே தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுவதாக கூறிய அமைச்சர் பரத்வாஜ், பொறுப்பிலிருக்கும் தேர்தல் ஆணையர்களில் பணி மூப்பு அதிகம் உள்ளவரையே தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கும் கொள்கையையே இந்த அரசும் கடைபிடிக்கும் என்று கூறினார்.
பரத்வாஜின் இந்த பதில், தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசுவாமியின் பரிந்துரையின் மீது அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்காது என்பதையே உறுதிபடுத்துவதாக கருதப்படுகிறது.