கோவாவில் இருந்து புதுடெல்லிக்கு வந்து கொண்டிருந்த தனியார் விமானத்தை 163 பயணிகளுடன் கடத்த முயன்ற விவகாரம் தொடர்பாக ஒரு பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவாவில் இருந்து இண்டிகோ என்ற தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் 163 பயணிகள், 6 விமான ஊழியர்களுடன் நேற்று மாலை டெல்லி நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது ஜெய்ப்பூருக்கு அருகில் விமானம் பறந்து கொண்டிருந்த போது ஒரு பெண் உட்பட 3 பேர் மிகவும் ஆர்ப்பாட்டமாக நடந்து கொண்டதுடன், விமானப் பணிப்பெண்களிடம் தாங்கள் விமானத்தை கடத்தப்போவதாக கூறி மிரட்டல் விடுத்தனர்.
மேலும், தங்களிடம் ஏராளமான ஆயுதங்கள் உள்ளதாகவும், விமானத்தில் அதனைப் பதுக்கி வைத்துள்ளதாகவும் எச்சரித்தனர். இதையடுத்து விமானப் பணிப்பெண்கள் சமயோசிதமாக செயல்பட்டு, விமானிக்கு கடத்தல் விவகாரம் குறித்து தகவல்கள் கொடுத்தனர்.
உடனடியாக செயல்பட்ட விமானி, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு அவசரத் தகவல் கொடுத்துடன், விமானத்தை இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் மாலை 5.29 மணியளவில் அவசரமாக தரையிறக்கினார்.
பின்னர் விமானத்தை சுற்றிவளைத்த பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தைக் கடத்தப்போவதாக மிரட்டல் விடுத்த ஜித்தேந்தர் குமார் மொஹல்லா, சமீர் உப்பால், ஹர்பீத் ஆனந்த் ஆகிய 3 பேரையும் கைது செய்ததாக விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விமானப் போக்குவரத்துத் துறை செயலர் மாதவன் நம்பியார், விமானத்தைக் கடத்துவதாக கூறிய 3 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும், பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதுடன், நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்றும் கூறினார்.
விமானக் கடத்தப்படுவதாக ஏற்பட்ட பரபரப்பு காரணமாக நேற்று மாலை டெல்லி விமானநிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய சில விமானங்கள் காலதாமதமாக புறப்பட்டுச் சென்றன. மேலும் டெல்லிக்கு வரும் சில விமானங்களும் தாமதமாகவே தரையிறங்கின.