இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓய்வில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங் இன்று காலை அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
பிரதமர் இன்னும் சில வாரங்களில் தனது வழக்கமான பணிகளுக்குத் திரும்புவார் என்று மத்திய நல்வாழ்வுத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு, முதன் முதலில் இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டது முதலே கடுமையாக உடற்பயிற்சிகளை இடைவிடாது கடைபிடித்து வந்ததால், தற்போதைய அறுவை சிகிச்சையையடுத்து பிரதமர் விரைவில் குணமடைந்து வருகிறார் என்றார் அவர்.
இன்னும் சில வாரங்கள் ஓய்வெடுத்த பிறகு பிரதமர் தனது வழக்கமான பணிகளுக்குத் திரும்பலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாகவும் அமைச்சர் அன்புமணி தெரிவித்தார்.
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடந்த 24ஆம் தேதி மும்பை ஆசிய இதய நிறுவனம், டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் ஆகிய புகழ்பெற்ற நிறுவனங்களின் மருத்துவர்கள் இதய அறுவை சிகிச்சை செய்தனர். பின்னர் 28 ஆம் தேதி பிரதமர் தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் இருந்து சாதாரணப் பிரிவிற்கு மாற்றப்பட்டார்.