தன்னைப் பதவிநீக்கக் கோரி குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ள தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா, பொதுத் தேர்தல் நடத்தும் பணிகளைத் தான் கவனித்துக்கொண்டு இருப்பதாகக் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக நடந்துகொள்ளும் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவை பதவிநீக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை அனுப்பியுள்ளார்.
இதனடிப்படையில் பதவி விலகுவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, நான் ஏன் பதவி விலக வேண்டும்? என்றார் நவீன் சாவ்லா.
தலைமைத் தேர்தல் ஆணையரின் பரிந்துரை பற்றிக் கருத்துத் தெரிவிக்க மறுத்த அவர், குடியரசுத் தலைவருக்கு எந்தக் கடிதமும் எழுதப்பட்டுள்ளதாகத் தனக்குத் தெரியவில்லை என்றார்.
அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்று கேட்டதற்கு, "நாங்கள் பொதுத் தேர்தலை நடத்தியாக வேண்டும். எனவே அந்தத் திசையில் நாங்கள் பணியாற்றியாக வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக முறைகேடற்ற தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. அதை நாங்கள் தொடர வேண்டும்" என்றார்.