தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் அனுப்பியுள்ள பரிந்துரையை பா.ஜ.க. வரவேற்றுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமற்ற போக்கையும், தன்னாட்சியையும் இந்த நடவடிக்கை வலுப்படுத்தும் என்று பா.ஜ.க. கூறியுள்ளது.
இதுகுறித்து ஹைதராபாத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, "நவீன் சாவ்லா காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் நெருக்கமானவர். தேர்தல் நேரங்களில் அவர் காங்கிரசிற்குச் சாதகமாக நடந்துள்ளார். இதுபற்றி நாங்கள் ஏற்கெனவே புகார் தெரிவித்துள்ளோம்.
மேலும், நவீன் சாவ்லாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று 200க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரிடம் மனு கொடுத்து உள்ளோம். ஆனால், காங்கிரஸ் தலைமையிலான அரசு அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது தலைமைத் தேர்தல் ஆணையரே பரிந்துரை அனுப்பியுள்ளார். இப்போதாவது குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். எங்களின் நிலைப்பாட்டிற்கு மதிப்பளிக்கப்பட்டுள்ளது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளோம்" என்றார்.