தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவைப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபால்சாமி அனுப்பியுள்ள பரிந்துரை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாற்றியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தையும் நடவடிக்கைகளையும் நாடாளுமன்றம் ஆய்வு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் அக்கட்சி கூறியுள்ளது.
இதுகுறித்து டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா, "தான் இன்னும் மூன்று மாதங்களில் ஓய்வுபெறப் போகிறோம் என்பது தலைமைத் தேர்தல் ஆணையருக்குத் தெரியும். அதே இடைவெளியில் நமது நாடு பொதுத் தேர்தலையும் சந்திக்கவுள்ளது.
இந்நிலையில், பா.ஜ.க.வின் புகாரை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவை பதவிநீக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் பரிந்துரை அனுப்பியுள்ளது சந்தேகத்தை எழுப்புகிறது. இதில் ஏதோ அரசியல் உள்நோக்கம் இருக்கிறது.
இந்த நடவடிக்கை அரசமைப்பிலும் அரசியலிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவார்.
எனவே, தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களையும், நடவடிக்கைகளையும் நாடாளுமன்றம் ஆய்வு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்றார்.