மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்கள் குறித்த விசாரணையில் வேண்டுமென்றெ உண்மையை மறைக்கும் நோக்கில் பாகிஸ்தான் தகவல்களை திரித்து வெளியிடுவதாக இந்தியா குறைகூறியுள்ளது.
மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக தூதரக ரீதியில் பதில் கூறாமல் பாகிஸ்தான் குழப்பமான பதில்களை தருவதாக புதுடெல்லியில் அயலுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
பயங்கரவாத அமைப்புகளுக்கும், ஐஎஸ்ஐ-க்கும் இடையேயான தொடர்புகளை வெளிப்படுத்துவதற்கு பாகிஸ்தான் போதிய ஆதாரங்களை அளிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடைய அமைப்புகள் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளின் பட்டியலை இந்தியா தயாரித்து வருவதாகவும், பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகளின் நெருக்குதலை தொடர்ந்து இந்தியா வலியுறுத்தும் என்றும் பிரணாப் முகர்ஜி கூறினார்.
மும்பையில் கடந்த 2006ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்ட ரயில் தொடர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ளவர்கள் குறித்தும், ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பின தலைவர் மசூத் அஸார் பெயரும் அந்தப் பட்டியலில் இடம்பெறும் என்றார்.
பாகிஸ்தானிடம் இருந்து மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர்கள் குறித்து ராஜ்ய ரீதியில் எவ்வித தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்று குறிப்பிட்ட பிரணாப் முகர்ஜி, பத்திரிகைகளின் மூலமாக மட்டுமே அறிந்து வருவதாகக் கூறினார்.
ஒரு அரசு இதுபோன்ற வகையில் பதிலளிப்பது சரியான வழிமுறையல்ல என்றும் அவர் கூறினார்.
பாகிஸ்தான் விசாரணை நடத்தி, அதன் முடிவுகள் இந்தியாவிடம் தெரிவிக்கப்பட வேண்டும் என்றார்.
பாகிஸ்தானின் பதில் முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல என்றும், இதேபோன்ற நிலை நீடித்தால், பாகிஸ்தான் நம்பகத்தன்மையை இழக்கும் என்றும் அரசு வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன..