சர்வதேச நாடுகளுடன் சமூகப் பயன்பாட்டிற்கான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதன் முக்கியப் படிகளில் ஒன்றாக, சர்வதேச அணு சக்தி முகமையுடன் முக்கியக் கண்காணிப்பு ஒப்பந்தம் ஒன்றில் பிப்ரவரி 2ஆம் தேதி இந்தியா கையெழுத்திடுகிறது.
இந்தியாவின் அணு மின் திட்டங்களுக்குத் தேவையான எரிபொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களை அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழு (என்.எஸ்.ஜி.) வழங்குவதற்கும், அமெரிக்காவுடனான சமூகப் பயன்பாட்டிற்கான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் சர்வதேச அணு சக்தி முகமையுடனான இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டியது அவசியம்.
சர்வதேச அணு சக்தி முகமையுடனான இந்தக் கண்காணிப்பு ஒப்பந்தத்தில் வியன்னாவில் இந்தியாவின் தூதர் செளரப் குமார் கையெழுத்திடுவார் என்றும், பின்னர் அது டெல்லியில் முறைப்படி செயல்படுத்தப்படும் என்றும் அணு சக்தித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கண்காணிப்பு ஒப்பந்தத்தை இறுதிப்படுத்துவதற்காக இந்தியாவின் முதன்மைப் பேச்சாளர் ரவி குரோவர் ஏற்கெனவே வியன்னா சென்றுள்ளார். அவர் அந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட வேண்டிய அத்தியாவசிய கூடுதல் அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
சர்வதேச அணு சக்தி முகமையின் கண்காணிப்பின் கீழ் நமது நாட்டில் 14 அணு உலைகளை அமைப்பதற்கு இந்த ஒப்பந்தம் அவசியமானது. நமது நாட்டிற்கு தருவதாக பிரான்ஸ் ஒப்புக்கொண்டுள்ள யுரேனியத்தை பெற்று அதனை உடனடியாகப் பயன்படுத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் அவசியம்.
பிரான்சிடம் இருந்து நாம் பெறும் யுரேனியம் கோட்டாவிலுள்ள ராஜஸ்தான் அணு மின் நிலையத்தின் இரண்டாவது யூனிட்டில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.