இலங்கை இனப் பிரச்சனைக்கு, அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு, விரைவாக அமைதியை ஏற்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய அரசியல் தீர்வு காண மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றும் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
இலங்கைப் பிரச்சனை தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கொழும்பு சென்றுவந்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி, தனது பயணம் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். சட்டப் பேரவையில் இன்று அந்தக் கடிதத்தை அமைச்சர் அன்பழகன் வாசித்தார். பின்னர் அது ஊடகங்களுக்கும் வழங்கப்பட்டது.
அந்தக் கடிதத்தில், "இலங்கை இனப் பிரச்சனைக்கு, அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு மற்றும் விரைவாக அமைதியை ஏற்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கி அரசியல் தீர்வு காண இந்திய அரசு தொடர்ந்து பணியாற்றும்.
பிரச்சனைக்குத் தீர்வுகண்டு இயல்பு வாழ்க்கையைத் தருவதற்காக நம்மால் முடிந்ததைச் செய்வதற்கு, போரில் அப்பாவி மக்களின் பாதுகாப்பு பற்றிய நமது கவலைகள் நம்மை வழிநடத்தும்.
ஜனவரி 27 அன்று கொழும்புவில் சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் நான் நடத்திய பேச்சுக்கள் குறித்து ஏற்கெனவே நான் உங்களுக்கு எழுதியுள்ளேன். அதனடிப்படையில், சண்டை நடைபெறும் பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு உடனடியாக வெளியேறுமாறு 48 மணி நேரம் அவகாசம் தந்து ராஜபக்சே நேற்று மாலை வேண்டுகோள் விடுத்தார்.
போர் நடக்கும் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரத் தேவையான நடவடிக்கைகளை சிறிலங்க அரசு எடுத்துள்ளது என்று நான் அறிகிறேன்.
பொது மக்களின் பாதுகாப்பு குறித்து இலங்கையில் எழுந்துள்ள பிரச்சனையையும், பொதுமக்கள் அனைவரும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற இந்திய அரசின் வலியுறுத்தலையும் நீங்கள் நினைவுகூற வேண்டும்.
இத்துடன் அயலுறவுச் செயலர், ராஜபக்ச ஆகியோரின் அறிக்கைகளின் நகல்களையும் இணைத்துள்ளேன்" என்று கூறியுள்ளார்.