கடந்த 1995 ஜனவரி 26 குடியரசு தினத்தன்று ஜம்முவில் நடந்த விழாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கு காரணமாக ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த முக்கியத் தீவிரவாதி 14 ஆண்டுகளுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 1995 ஜனவரி 26 குடியரசு தினத்தன்று ஜம்முவில் உள்ள மொளலானா ஆசாத் (எம்.ஏ.) விளையாட்டு அரங்கில் நடந்த விழாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் 12க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆளுநர் கே.வி. கிருஷ்ணா ராவ் மயிரிழையில் உயிர் தப்பினார்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தின் முன்னால் தளபதி வாஸிம் மாலிக் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிஸ்த்வார் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மற்றொரு முக்கியத் தீவிரவாதியான ஜாஹித் சரூரி பற்றித் தெரியவந்தது. அவரைக் காவலர்கள் தேடி வந்தனர்.
இந்நிலையில், கிஸ்த்வார் பேருந்து நிலையத்திற்கு அருகில் பதுங்கியிருந்த ஜாஹித் சரூரியை நேற்றுப் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
வாஸிம், ஜாஹித் ஆகியோரிடம் பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் வெடி பொருட்களைக் கொடுத்து எம்.ஏ. அரங்கில் குண்டு வெடிப்பை நடத்துமாறு கூறியுள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.