பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படும் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வழங்குவதை பிப்ரவரி 13ஆம் தேதி வரை நிறுத்தி வைக்குமாறு தமிழ்நாட்டின் எல்லா மாவட்ட ஆட்சியர்களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜல்லிக்கட்டிற்குத் தடை விதிக்கக்கோரி இந்திய விலங்குகள் நல வாரியம் தொடர்ந்துள்ள வழக்கில், தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி பி.சதாசிவம் ஆகியோர் கொண்ட முதன்மை அமர்வு இந்த தடை உத்தரவை இன்று பிறப்பித்தது.
மேலும், இவ்வழக்கில் தமிழக அரசு உள்ளிட்ட எதிர்த்தரப்பினர் பிப்ரவரி 13ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக விலங்குகள் நல வாரியம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், ஜல்லிக்கட்டு ஒரு கொடூரச் சண்டை என்றும், இதில் பங்கேற்கும் காளைகளின் கண்களில் மிளகாய்ப் பொடி தூவி போட்டி அமைப்பாளர்கள் சித்ரவதை செய்வார்கள் என்றும் வாதிட்டார்.
ஆதரவில்லாத விலங்குகளை இப்படிக் கொடூரமாகத் துன்புறுத்துவது மனிதாபிமானமற்ற செயல் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இதற்கு முன்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை போட்டி அமைப்பாளர்கள் மீறியுள்ளனர் என்று குற்றம்சாற்றிய வேணுகோபால், நீதிமன்றத்தை அவமதித்ததற்காக அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நிபந்தனைகளுடன் அனுமதியளித்து 2008ஆம் ஆண்டு ஜனவரி 8 அன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ள பாதுகாப்பு விதிமுறைகளை போட்டி அமைப்பாளர்கள் சிறிதும் பின்பற்றவில்லை என்பதால், ஜல்லிக்கட்டிற்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.