சிறிலங்கப் படையினரின் தாக்குதல்களில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைக் கண்டித்துப் புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரி மாணவர்கள் கறுப்புப் பட்டை அணிந்து வகுப்புகளுக்குச் சென்றனர்.
மாணவர்கள் கூட்டமைப்பின் வேண்டுகோளிற்கு இணங்க தாங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இலங்கையில் போரை நிறுத்தி அப்பாவித் தமிழர்களைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவ்வமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கம் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால், நீதிமன்றங்கள் வழக்கறிஞர்கள் இன்றி வெறிச்சோடிக் கிடந்தன.
நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் வருகிற திங்கட்கிழமையும் தொடரும் என்று வழக்கறிஞர் சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி சோளிங்கர் கிராமம் முத்தையால் பேட்டை மணிக்கூண்டு அருகில் ஏராளமான இளைஞர்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.