தொகுதிப் பங்கீட்டுத் தொல்லையைத் தவிர்க்கும் நோக்கில், அடுத்த மக்களவைத் தேர்தலில் தேச அளவில் யாருடனும் கூட்டணி வைப்பதில்லை என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
டெல்லியில் இன்று நடந்த காங்கிரஸ் கட்சியின் பணிக்குழுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ஜனார்தன் திரிவேதி, "நாங்கள் தேசிய அளவில் கூட்டணி வைக்கப் போவதில்லை. மாநில அளவில் மட்டும் கூட்டணிகளை அமைத்து, தொகுதிப் பங்கீடு செய்துகொள்வோம்" என்றார்.
மாநிலத்திற்கு மாநிலம் தொகுதிப் பங்கீடு வேறுபடும் என்று குறிப்பிட்ட அவர், "அந்தந்த மாநில காங்கிரஸ் தலைமையானது உள்ளூர் நிலவரம், தன்னுடன் கூட்டணி வைத்துள்ள கட்சியின் நிலவரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அகில இந்தியக் காங்கிரஸ் தலைமையின் ஆதரவுடன் முடிவெடுக்கும்.
கூட்டணி வைத்துள்ள மாநிலங்களைத் தவிர பிற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி தனியாக வாக்குச் சேகரிக்கும். கூட்டணி வைக்கும் மாநிலங்களில் தன்னுடன் உள்ள பிற கட்சிகளுக்கும் சேர்த்து காங்கிரஸ் வாக்கு கேட்கும்" என்றார்.