வாகனங்களில் அளவுக்கு அதிகமான சரக்குகளை ஏற்றும் பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் சரக்கு கிடங்குகள், எடை பார்க்கும் பாலங்கள், கிரேன்கள் ஆகியவற்றை அமைப்பதற்கு மத்திய அரசு நிதியுதவி செய்யவுள்ளதாக மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.
புது டெல்லியில் தனது தலைமையில் நடந்த தேசிய சாலைப் பாதுகாப்பு கவுன்சிலின் 11-வது கூட்டத்தில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பிற முக்கிய தீர்மானங்களாவன :
நடப்பாண்டு மார்ச் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நாடெங்கிலும், அளவுக்கு அதிகமான சரக்கு ஏற்றுவது தொடர்பான முனைப்பான இயக்கம் நடத்தப்படும்.
வேகத்தை கட்டுப்படுத்தும் கருவிகளை போக்குவரத்து வாகனங்களில் பொருத்துவது தொடர்பான அதிகாரங்கள் மாநில அரசுகளின் வசம் தொடர்ந்து இருக்கும்.
ஒவ்வொரு மாநிலத்திலும், படிப்படியாக, கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு மையங்களை அமைப்பதற்கு மத்திய அரசு நிதியதவி செய்யும்.
மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஓட்டுனர் உரிமம் வழங்கும் முறை, குடித்துவிட்டு வாகனம் ஒட்டுதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், பிற அமைப்புகள் தெரிவித்துள்ள பரிந்துரைகளை அமைச்சகம் குறித்த காலத்திற்குள் ஆய்வு செய்து, தேவைப்பட்டால் சட்டத்திலும், நெறிமுறைகளிலும் திருத்தங்கள் செய்யும்.
கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் அனைத்து பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்த பாடத்தை சேர்ப்பதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து நடவடிக்கை எடுக்கும்.
தேசிய நெடுஞ்சாலைகளையொட்டி அளிக்கப்படும் சேவைகள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்கு, ஒழுங்குபடுத்தும் அமைப்பு ஒன்றை உருவாக்க கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.