Publish Date: Thu, 29 Jan 2009 (12:26 IST)
Updated Date: Thu, 29 Jan 2009 (12:26 IST)
புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் வெள்ளியன்று வீடு திரும்புவார் என்று தெரிகிறது.
இதய அறுவை சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வரும் பிரதமர், இன்று மருத்துவமனையின் வராண்டாவில் நடைபயிற்சி மேற்கொண்டதாகவும், மிக எளிய உடற்பயிற்சிகளை செய்ததாகவும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக பிரதமர் நேற்று தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அனைத்து கண்காணிப்பு சாதனங்களும் அகற்றப்பட்டு நல்ல உடல் நலத்துடன் அவர் உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் மன்மோகன் சிங் நேற்று ஆலோசனை நடத்தியதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அநேகமாக பிரதமர் நாளை (வெள்ளிக்கிழமை) மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று மருத்துவர்களை மேற்கோள்காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.