Publish Date: Wed, 28 Jan 2009 (19:39 IST)
Updated Date: Wed, 28 Jan 2009 (19:39 IST)
வடக்கு காஷ்மீரில் 3 இடங்களில் நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 4 பேரும், படையினர் 2 பேரும் கொல்லப்பட்டனர் என்றும், மேலும் 5 படையினர் காயமடைந்தனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பாரமுல்லா மாவட்டத்தில் சோபர் நகர எல்லையில் உள்ள அமர்கார்க் என்ற இடத்தில் மொஹம்மது அக்பர் என்பவரின் வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுடன் நேற்று மாலை துவங்கி இன்று காலை முடிந்த கடும் துப்பாக்கிச் சண்டையில், அல் பாதர் என்ற இயக்கத்தைச் சேர்ந்த முக்கியத் தீவிரவாதி அபு ஹம்சா என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இம்மோதலில் சோஹன் சிங் என்ற படையினர் ஒருவரும் கொல்லப்பட்டார்.
குப்வாரா மாவட்டத்தில் ஹேண்ட்வாரா நகரத்தில் பகிஹாரா என்ற இடத்தில் நேற்று மதியம் முதல் இன்று மாலை வரை நடந்த மற்றொரு மோதலில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார், மேலும் 4 படையினர் காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொல்லப்பட்ட தீவிரவாதியின் பெயர் அபு அப்துல் ரெஹ்மான் என்றும், அவர் லஸ்கர்- ஈ தயீபா இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் என்பதும் தெரியவந்துள்ளது.
இதேபோல பந்திபோரா மாவட்டத்தில் அயட்முல்லா என்ற கிராமத்தில் அப்துல் அஜீஸ் என்பவரின் வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளை வெளியேற்ற இன்று காலை முதல் நடந்த மோதலில், 2 தீவிரவாதிகளும், படையினர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒரு படையினர் காயமடைந்துள்ளார். இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ள தீவிரவாதிகளின் விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.