முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமனின் உடல் இன்று முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
உடல் உறுப்புக்கள் செயலிழந்ததால் நேற்று தனது 98ஆவது வயதில் காலமான முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமனின் இறுதிச் சடங்குகள் தலைநகர் டெல்லியில் இன்று நடந்தது.
இராணுவ வாத்தியங்கள் இசைக்க, வானில் 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நடந்த இறுதிச் சடங்கில் ஆர். வெங்கட்ராமனின் உடலிற்கு அவரது மருமகன் கே. வெங்கட்ராமன் எரியூட்டினார்.
இந்நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம், துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் பைரோன் சிங் ஷெகாவத் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இவர்கள் தவிர, அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் பிரதமர் ஐ.கே. குஜ்ரால், பா.ஜ.க. தலைவர் எல்.கே. அத்வானி, டெல்லி முதல்வர் ஷீலா தீக்ஷித், முன்னாள் உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பாட்டீல் மற்றும் முப்படைத் தளபதிகள் ஆகியோரும் பங்கேற்றனர்.
முன்னதாக, ஆர். வெங்கட்ராமனின் உடல் அவரது அதிகாரப்பூர்வக் குடியிருப்பான சஃதர்ஜங் சாலை இல்லத்தில் இருந்து மூவண்ணக் கொடியால் மூடி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இந்த இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.