முஸ்லிம்களுக்கு தற்போதுள்ள எண்ணிக்கையின் அடிப்படையில் வேலைவாய்ப்பிலும் கல்வியிலும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக புதுவை மாநில முஸ்லிம் மக்கள் முன்னேற்றத் தலைமைப் பேரவை எச்சரித்துள்ளது.
இதுகுறித்துப் புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அப்பேரவையின் நிறுவனர் பி.ஏ. மங்குஸ், புதுச்சேரி வாழ் முஸ்லிம் சமூகத்தை மாநில அரசு ஏமாற்றி வருவதாகக் குற்றம்சாற்றினார்.
கடந்த 1991 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி, புதுச்சேரியில் 59,000 முஸ்லிம்கள் வசிக்கிறார்கள் என்ற அடிப்படையிலேயே இன்னும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதுநாள் வரை புதிய மக்கள் தொகைக் கணக்கீடு எடுக்கப்படவில்லை என்றார் அவர்.
தங்கள் கோரிக்கையை ஏற்று 2.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்வோம் என்று தெரிவித்த அவர், இருந்தாலும் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்வதற்காக நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம் என்று தெரிவித்தார்.