Publish Date: Wed, 28 Jan 2009 (17:19 IST)
Updated Date: Wed, 28 Jan 2009 (17:19 IST)
நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் முடிவாகவில்லை என்று தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
லண்டனில் இந்தியா ஹவுஸில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேய்ஷி, இந்தியாவில் பொதுத் தேர்தல் ஏப்ரல் 8 முதல் மே 15 ஆகிய தேதிகளுக்குள் நடத்தப்படலாம் என்று தெரிவித்தார் என்று வெளியான செய்திகள் குறித்துக் கேட்டதற்கே தேர்தல் ஆணையம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
இதுகுறித்துத் தலைநகர் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் ஆணையப் பேச்சாளர், "மக்களவைத் தேர்தல் தேதிகளை முடிவு செய்வதற்காகத் தேர்தல் ஆணையம் இன்னும் கூடவில்லை. தேதிகளைக் குறிப்பிட்டு வெளிவரும் தகவல்கள் அதிகாரபூர்வமானவை அல்ல" என்றார்.
தற்போதைய 14ஆவது மக்களவையின் ஆயுட்காலம் வருகிற மே மாதத்துடன் முடிவதை முன்னிட்டு அடுத்த மக்களவையைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி குறித்த அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.