இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்து வரும் போரில் அப்பாவித் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவது குறித்து சிறிலங்க அதிபரிடம் கவலை தெரிவித்துள்ள அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அவர்களின் பாதுகாப்பை சிறிலங்க அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைப் பிரச்சனை தொடர்பாக விவாதிக்க இரண்டு நாள் பயணமாகக் கொழும்பு சென்றுள்ள அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நேற்று மாலையே சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான அடிப்படை முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம்" என்றார்.
தமிழக முதல்வர் மு.கருணாநிதி, அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலர் ஜெயலலிதா ஆகியோர் கொண்ட தமிழ்நாட்டுப் பிரதிநிதிகள் குழு போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் வடக்குப் பகுதிகளுக்கு வருகை தர வேண்டும் என்று மகிந்த ராஜபக்ச தன்னிடம் கூறியதாகவும், அவரின் அழைப்பைத் தமிழ்நாட்டுத் தலைவர்களிடம் தெரிவிப்பதாக தான் உறுதியளித்ததாகவும் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
ஜனநாயக வழிமுறைகளை வேகமான நடைமுறைப்படுத்துவதன் மூலம் மட்டுமே இலங்கைத் தமிழர்களின் நிலையை மேம்படுத்த முடியும் என்று கூறிய பிரணாப், அதிகாரப் பகிர்வு தொடர்பான 13ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை மிக விரைவாக அமல்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மகிந்த தன்னிடம் உறுதியளித்தார் என்று கூறியுள்ளார்.