இந்தியாவில் அடுத்த பொதுத் தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல் 8 முதல் மே 15 வரையிலான இடைப்பட்ட தேதிகளில் நடக்கக்கூடும் என்று தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேய்ஷி லண்டனில் தெரிவித்தார்.
லண்டனில் உள்ள இந்தியா ஹவுஸ் கட்டடத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடந்த 'ஜம்மு-காஷ்மீர் தேர்தல்- 2008' என்ற தலைப்பில் உரையாற்றிய குரேய்ஷி, "இந்தியாவில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான இறுதித் தேதிகள் குறித்துத் தேர்தல் ஆணையம் இன்னும் விவாதிக்கவில்லை. ஆனால், ஏப்ரல் 8 முதல் மே 15 வரையிலான இடைப்பட்ட தேதிகளில் தேர்தல் நடக்கக்கூடும்" என்றார்.
இந்நிகழ்ச்சியில் பிரிட்டனிற்கான இந்தியத் தூதர் சிவ் சங்கர் முகர்ஜி பங்கேற்றார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த குரேய்ஷி, 67 கோடி வாக்காளர்கள் தொடர்புடைய இந்தியாவிக் பொதுத் தேர்தல்தான் உலகின் மிகப்பெரிய தேர்தல் நடவடிக்கை ஆகும். இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகபட்ச நம்பகத்தன்மையைப் பெற்றுள்ளது என்றார்.
மேலும், இந்தியாவில் ஆளும் கட்சி எப்போதும் எங்கள் விடயத்தில் மகிழ்ச்சியாக இருப்பதில்லை என்றாலும் எதிர்க்கட்சி எங்களை விரும்புகிறது. ஆனால், எதிர்க்கட்சி ஒருமுறை ஆளுங்கட்சியாக மாறிவிட்டால் நிலைமை தலைகீழாகி விடுகிறது. இருந்தாலும் இரண்டு கட்சிகளும் தங்களின் ஆட்சி நிலையானது அல்ல என்பதைப் புரிந்து செயல்படுகின்றனர் என்றார் குரேய்ஷி.