Publish Date: Tue, 27 Jan 2009 (20:15 IST)
Updated Date: Tue, 27 Jan 2009 (20:15 IST)
முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமனின் மறைவிற்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், வெங்கட்ராமன் மிகச்சிறந்த நாடாளுமன்றவாதியாகவும், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் முனைப்புடன் பங்கேற்ற சுதந்திர போராட்ட வீரராகவும் இருந்தவர் என்றும், மாநிலங்களவையின் துணைத் தலைவராக தான் இருந்தபோது அவருடன் கலந்துரையாடிய காலம் என்றும் தனது நினைவில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
வெங்கட்ராமன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி வெளியிட்டுள்ள செய்தியில், தனது நீண்ட பொது வாழ்வில் தனது எளிமையால் தடம் பதித்துச் சென்றவர் வெங்கட்ராமன் என்றும், ஏழை மக்கள், ஒடுக்கப்பட்டவர்பால் பரிவு காட்டிய அவரையும், அவரது அரும்பணிகளையும் நாடு என்றென்றும் நினைவு கூறும் என்றும் தெரிவித்துள்ளார்.
வெங்கட்ராமன் மறைந்ததை அறிந்து பிரதமர் மன்மோகன் சிங் தனது அதிர்ச்சியைத் தெரிவித்துள்ளார். அவர் பொது வாழ்வில் மிகச்சிறந்து விளங்கினார் என்றும், தேசத்திற்கு குடியரசுத் தலைவராக அவர் ஆற்றிய சேவைகளுக்காக நீண்டகாலம் நினைவு கூறப்படுவார் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். வெங்கட்ராமனின் குடும்பத்தினர், நண்பர்களுக்கு பிரதமர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.