Publish Date: Tue, 27 Jan 2009 (12:59 IST)
Updated Date: Tue, 27 Jan 2009 (12:59 IST)
மகாராஷ்டிர மாநிலம் மும்பை புறநகர்ப் பகுதியான அந்தேரியில் நட்சத்திர விடுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், சாம்னா நாளிதழின் நிர்வாக ஆசிரியருமான சஞ்சய் ரவுத்தை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.
பந்தூப் என்ற இடத்தில் சஞ்சயின் வீட்டில் இன்று காலை அவரைக் கைது செய்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்தேரியில் உள்ள நட்சத்திர விடுதியில் 21 ஊழியர்களை பணி நீக்கம் செய்ததைக் கண்டித்து, அந்த விடுதிக்குள் கடந்த வாரம் புகுந்த சிவசேனா கட்சியினர் 500 பேர், அங்கு தாக்குதலில் ஈடுபட்டதுடன், சமையலறையையும் அடித்து உடைத்தனர்.
இத்தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மகாராஷ்டிர மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சிவசேனா எம்.பி கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த தாக்குதலுக்கு சஞ்சய் ரவுத் தலைமை தாங்கியதாகவும், கைது செய்யப்பட்டுள்ள அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.