மங்களூரில் உள்ள நட்சத்திர விடுதியில் இருந்த இளம் பெண்கள் மீது வெறித்தனமான தாக்குதல் நடத்திய ஸ்ரீராம சேனா அமைப்பின் தலைவர் உட்பட 17 பேரை கர்நாடக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மங்களூரில் உள்ள ஒரு நட்சத்திர கேளிக்கை விடுதியில் கடந்த சனிக்கிழமை அத்துமீறி நுழைந்த ஸ்ரீராம சேனா அமைப்பைச் சேர்ந்த சிலர், அங்கு நடனமாடிக் கொண்டிருந்த ஆண்கள், இளம் பெண்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஆபாசமாக நடமாடியதாகக் கூறி பெண்களை கடுமையாகத் தாக்கினர். இதில் சில இளம் பெண்கள் படுகாயமடைந்தனர்.
இதுதொடர்பாக தலைமறைவாக இருந்த ஸ்ரீராம சேனா அமைப்பின் துணைத் தலைவர் பிரசாத் அட்டரா நேற்றிரவு கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில மேற்கு சரக காவல்துறை தலைமை ஆய்வாளர் (ஐ.ஜி) பிரசாத் தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதல் குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, இளம் பெண்கள் மீதான இந்தத் தாக்குதல் துரதிருஷ்டவசமானது எனக் கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஸ்ரீராம சேனா அமைப்பினரைக் கைது செய்ததைத் கண்டித்து அம்மாநிலத்தின் ஒரு சில இடங்களில் கலவரங்களும், அரசு பேருந்துகள் கல்வீச்சும் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.