இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலை சிறிலங்க அரசு தீவிரப்படுத்தியுள்ள நிலையில், போரை நிறுத்தி அமைதி ஏற்படுத்துவது குறித்து பேச்சு நடத்த அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று இலங்கை செல்கிறார்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக ராணுவம் பயங்கர தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் ஏராளமான அப்பாவி தமிழர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழர்களை பாதுகாக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் மத்திய அரசுக்கு ஒருமித்த வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து போர் நிறுத்தம் பற்றி விவாதிக்க அமைச்சர் பிரணாப்முகர்ஜி இலங்கை செல்வார் என பிரதமர் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தார்.
விடுதலைப் புலிகளின் முக்கிய இடமாக விளங்கிய முல்லைத்தீவை பிடித்து விட்டதாக சிறிலங்க ராணுவம் அறிவித்துள்ள நிலையில் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று இலங்கை செல்கிறார்.
சிறிலங்க அதிபர் மகிந்தா ராஜபக்ச, அந்நாட்டு அயலுறவு அமைச்சர் ரோகிதா போகோலகாமா ஆகியோரை சந்தித்து பிரணாப் முகர்ஜி பேசுவார் என்றும், இச்சந்திப்பின் போது இலங்கையில் தற்போது உள்ள சூழ்நிலை, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நிறுத்தி அமைதி ஏற்படுத்துவது குறித்து விவாதிப்பார் எனத் தெரிகிறது.