இஸ்ரோ தலைவர் ஜி.மாதவன் நாயர், அணுசக்தி ஆணையத் தலைவர் அனில் ககோட்கர், சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்லால் பகுகுணா, கிறிஸ்தவ அறத்தொண்டு அமைப்பைச் சேர்ந்த சகோதரி நிர்மலா உள்ளிட்ட 10 பேருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் உட்பட 5 பேருக்கு பத்ம பூஷண் விருதும், நடிகர் விவேக் உட்பட 9 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்படுகிறது.
133 விருதுகள்: மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி 10 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 30 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 93 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் என மொத்தம் 133 பேர் பத்ம விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வாய்ப்பாட்டு கலைஞர் பண்டிட் பீம்சேன் ஜோஷிக்கு வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.
ஒலிம்பிக் தங்கப் பதக்க வீரர் அபிநவ் பிந்த்ரா, தொழில்நுட்ப வல்லுநர் சாம் பித்ராடோ, பத்திரிகையாளர் சேகர் குப்தா உட்பட 30 பேருக்கு பத்ம பூஷண் விருதும், முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யா ராய், நடிகர் அக்ஷய் குமார் உள்ளிட்ட 93 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி, பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன் பங்கஜ் அத்வானி மற்றும் முன்னாள் ஹாக்கி வீரர் பல்வீர் சிங் குல்லார் ஆகியோரும் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.