உத்திரயப்பிரதேச மாநிலம் நொய்டா அருகே 2 பயங்கரவாதிகளை பயங்கரவாத தடுப்பு காவற்படையினர் இன்று அதிகாலை சுட்டுக் கொன்றனர்.
60-வது குடியரசு தினம் திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் பயங்கரவாத தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக பயங்கரவாத தடுப்பு காவற்படைக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலை அடுத்து டெல்லி மற்றும் முக்கிய நகரஙகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் இருந்து சந்தேகத்துக்கு இடமான வகையில் ஒரு மாருதி கார் வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பல்வேறு பகுதிகளிலும் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது.
இன்று அதிகாலை 2.15 மணிக்கு நொய்டாவின் செக்டர் 97 என்ற இடத்தில் வந்த மாருதி காரை பயங்கரவாத தடுப்பு காவற்படையினர் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றது. உடனடியாக காவல்துறையினர் ஜீப்பில் அந்த காரை துரத்திச் சென்றனர். இதற்கிடையே காவல்துறையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். காவல்துறையினரும் திருப்பிச் சுட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஸ்கர்-இ-தயிபா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இந்த பயங்கரவாதிகள் சதித்திட்டத்துடன் உத்தரபிரதேச மாநிலத்துக்குள் ஏற்கனவே ஊடுருவி பதுங்கி இருந்துள்ளனர். நேற்று இரவு புலாந்சாகர் என்ற இடத்தில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்டனர்.
இந்த இரு பயங்கரவாதிகளும் பாகிஸ்தானின் ராவல்கோட் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், இவர்களது பெயர் அகாரா மற்றும் அபு இஸ்மாயில் என்பதும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து டெல்லியில் திங்கட்கிழமை நடைபெறும் குடியரசு தினவிழாவுக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.