நெஞ்சுவலி காரணமாக அவதிப்பட்டு வந்த பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.
இன்று காலை 7 மணியளவில் துவங்கப்பட்ட இந்த இருதய அறுவை சிகிச்சை சுமார் 6 மணி நேரம் நடைபெறும் எனத் அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக (எய்ம்ஸ்) மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த இருதய அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற ராம்கன்ட் பாண்டே தலைமையிலான 11 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் பிரதமருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் லண்டனில் பிரதமருக்கு முதல் முறையாக இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் பூரண நலத்துடன் இருந்து வந்த பிரதமர், கடந்த சில நாட்களாக மீண்டும் நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் பிரதமருக்கு இருதயத்தின் சில பகுதிகளில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.