ரயில்களில் பயணம் செய்யும் புற்று நோயாளிகள் மற்றும் அவர்களுக்கு உதவியாக வருபவர்களுக்கு இருக்கை ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, வாரியம் அனைத்து மண்டல ரயில்வே அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சலுகைக் கட்டணத்தில் ரயில்களில் பயணம் செய்யும் புற்று நோயாளிகளுக்கு, முன்பதிவு செய்யும் போதே பொது கோட்டா, புற்று நோயாளிகளுக்கான தனி கோட்டா, அவசர கோட்டா ஆகிய அனைத்திலும் முன்னுரிமை தர வேண்டும். இந்த வசதி தட்கல் முறைக்கு பொருந்தாது.
உதவிக்கு ஒருவருடன் ரயிலில் பயணம் செய்யும் புற்று நோயாளிகளுக்கு இரண்டாம் வகுப்பு, குளிர்சாதன இருக்கை வசதி, 3 ஏசி ஆகிய வகுப்புகளில் 75 சதவீத கட்டணச் சலுகையும், 2 ஏசி மற்றும் 1 ஏசி வகுப்புகளில் 50 சதவீத கட்டணச் சலுகையும் ரயில்வே அளிக்கிறது.
இவர்கள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காகவும், பரிசோதனைக்காகவும் சென்று வரும் போது இந்த கட்டணச் சலுகை வழங்கப்படுகிறது. நோயாளிகள் இந்தச் சலுகையை பெற சம்பந்தப்பட்ட மருத்துவமனையிலிருந்து சான்றிதழைப் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.