பாகிஸ்தான் மண்ணிலிருந்து இயங்கி வரும் பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி அந்நாட்டு அரசிற்கு அழுத்தம் கொடுக்கத் தாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குச் சர்வதேசச் சமூகம் ஒத்துழைக்க வேண்டும் என்று இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.
பயங்கரவாதத்தின் மையம் பாகிஸ்தான் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளது பற்றிய கேள்விக்குப் பதிலளித்த பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி, "பயங்கரவாதத்தை முறியடிக்க வேண்டும் என்ற எங்களின் கோரிக்கைகளுக்கான பலன்கள் விரைவாகக் கிடைக்க சர்வதேசச் சமூகம் ஒத்துழைக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றார்.
இரக்கம் அல்லது கடுமை ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு இந்தியா பலன்களை எதிர்பார்க்கிறது. அதற்காகத்தான் நாம் காத்திருக்கிறோம் என்றார் அவர்.
எல்லைக்கு அப்பால் இருந்து செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் இந்தியாவிற்கு மட்டும் அச்சுறுத்தலாக இல்லை; ஒட்டுமொத்த உலகிற்கும் அச்சுறுத்தலாக உள்ளனர் என்று நாம் உலகிற்கு எப்போதும் சொல்லி வருகிறோம் என்றார் ஏ.கே. அந்தோணி.
மேலும், "எல்லைக்கு அப்பால் இருந்து ஏராளமான பயங்கரவாத இயக்கங்கள் செயல்படுகின்றன என்ற புரிதல் ஏற்பட்டு வருவது குறித்து எனக்கு மகிழ்ச்சி. எங்களிடம் உள்ள தகவல்களின்படி 30க்கும் மேற்பட்ட பயங்கரவாத இயக்கங்கள் எல்லைக்கு அப்பால் இருந்து செயல்படுகின்றன.
மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களுக்குக் காரணமான பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகிஸ்தானில் உள்ள எல்லா பயங்கரவாத இயக்கங்களும் ஒழிக்கப்பட வேண்டும்" என்று அந்தோணி வலியுறுத்தினார்.