பிரதமருக்கு நாளை இருதய அறுவை சிகிச்சை
Publish Date: Fri, 23 Jan 2009 (13:01 IST)
Updated Date: Fri, 23 Jan 2009 (12:59 IST)
இருதயக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வரும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நாளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக குடியரசு தின நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது.
இருதயக் கோளாறு காரணமாக அவதிப்பட்ட பிரதமருக்கு கடந்த 20ஆம் தேதி டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகம் (எய்ம்ஸ்) மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் 21ஆம் தேதி நடந்த மேல் பரிசோதனையில் அவரது இருதயத்தின் சில பகுதிகளில் அடைப்பு இருப்பதை மருத்துவர் குழு கண்டறிந்தது. எனினும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்வது குறித்து இறுதிமுடிவு செய்யப்படாத காரணத்தால் நேற்று காலை 6.30 மணியளவில் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து பிரதமர் வீடு திரும்பியதுடன், தனது வழக்கமான அலுவலகப் பணிகளையும் மேற்கொண்டார்.இதற்கிடையில், பிரதமருக்கு இருதய அறுவை சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ள மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். இதன்படி எய்ம்ஸ் மருத்துவமனை, மும்பை மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த இருதய அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் அடங்கிய குழு நாளை பிரதமருக்கு அறுவை சிகிச்சை நடத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்கைக்குப் பின் பிரதமர் முழுமையாக குணமடைய சில நாட்கள் பிடிக்கும் என்பதால், பிரதமரின் பொறுப்புகளை அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கவனிப்பார் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.குடியரசு தின விழாவில் பங்கேற்க மாட்டார்: நாளை (24ஆம் தேதி) அறுவை சிகிச்சை நடத்தப்பட உள்ளதால், வரும் 26ஆம் தேதி புதுடெல்லியில் நடக்கும் குடியரசு தின நிகழ்ச்சிகளில் பிரதமர் உடல் நலம் கருதி பங்கேற்க மாட்டார் என்றும் எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்கள் கூறுகின்றன.