Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செய்தி ஊடகங்களுக்கு சுயக் கட்டுப்பாடு தேவை: டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

செய்தி ஊடகங்களுக்கு சுயக் கட்டுப்பாடு தேவை: டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
, வெள்ளி, 23 ஜனவரி 2009 (11:39 IST)
செய்தி ஊடகங்கள் வணிக நலன்களுக்காக மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் செய்திகளை வெளியிடுவதை கண்டித்துள்ள டெல்லி உயர் நீதிமன்றம் ஊடகங்களுக்கு இவ்விடயத்தில் சுயக் கட்டுப்பாடு அவசியம் என்று வலியுறுத்தியுள்ளது.

பயங்கரவாதிகள் என்று சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நபர்களின் வாக்குமூலங்களை ஊடகங்களுக்கு கசிய விடுவதாகக் குற்றம்சாட்டியும், அதற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரியும் அரசு சாரா சமூக நல அமைப்பு ஒன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தது.

இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் ‘ஊடகங்களுக்கு இந்த விஷயத்தில் ஒரு சுயக் கட்டுப்பாடு வேண்டும், எல்லா விடயங்களிலும் வணிக நலன்களை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுவது நல்லதல்’ என்று அறிவுறுத்தியுள்ளது.

மேலும், டெல்லி தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யபட்டு காவல்துறை விசாரணையில் உள்ள 3 பேரின் வாக்குமூலங்களை எவ்வாறு பெற முடிந்தது என்றும் சம்பந்தப்பட்ட வாரப் பத்திரிக்கைக்கு நீதிமன்றம் தாக்கீது அனுப்பியுள்ளது.

விசாரணையின் போது காவல்துறையினர் பெறும் வாக்குமூலங்களை ஊடகங்கள் வெளியிடுவதற்கு நீதிமன்றம் சில வழிமுறைகளை வகுத்து கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்த சமூக நல அமைப்பு தனது மனுவில் கோரியுள்ளது.

ஆனால் இந்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டால் பதற்றம் நிறைந்த செய்திகளை வெளியிடுவதில் அது சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே இதனை நீதிமன்றம் ஏற்கக்கூடாது என்று செய்தி ஒளிபரப்பாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil