மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தனது குடிமக்கள் 3 பேரை இழந்துள்ள ஜெர்மனி, இந்தத் தாக்குதலிற்கு லஸ்கர்- ஈ தயீபாதான் பொறுப்பு என்று கூறியுள்ளது.
மும்பைத் தாக்குதல்கள் தொடர்பான தகவல்களை பறிமாறிக்கொள்வதற்காக இந்தியா வந்துள்ள ஜெர்மனியின் ஃபெடரல் காவல்துறைத் தலைவர் ஜார்ஜ் ஜியெர்க், டெல்லியில் தேசப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், உள்துறைச் செயலர் மதுக்கர் குப்தா, புலனாய்வுத் துறைத் தலைவர் ராஜீவ், மத்தியப் புலனாய்வுக் கழக இயக்குநர் அஸ்வனி குமார், போதைப் பொருள் தடுப்புத்துறை உயர் அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.
பின்னர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஜியெர்க், "இதுவரை நாங்கள் நடத்தியுள்ள புலனாய்வுகளின்படி இந்தத் தாக்குதல்களுக்கு லஸ்கர்- ஈ தயீபா இயக்கம்தான் பொறுப்பு என்று நாங்கள் கருதுகிறோம். ஆனால் அந்த இயக்கத்திற்கு நேரடித் தொடர்பு இருக்கிறதா என்று எங்களுக்குத் தெரியாது. அல்- காய்டாவுடன் தொடர்புடைய மற்ற இயக்கங்களுக்கு இதில் தொடர்பிருக்கலாம் என்ற கணிப்பையும் மறுப்பதற்கில்லை" என்றார்.