Publish Date: Tue, 20 Jan 2009 (21:00 IST)
Updated Date: Tue, 20 Jan 2009 (20:59 IST)
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு மராட்டிய பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில், வெடிபொருட்களை வழங்கிய இராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித் முக்கியச் சதிகாரர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வெடிகுண்டுகளை வைப்பதற்கு ஆட்களை ஏற்பாடு செய்த பெண் துறவி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் முக்கியக் குற்றவாளி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மராட்டிய மாநிலத் தலைநகர் மும்பையில் உள்ள மராட்டிய மாநில அமைப்பு ரீதியிலான குற்றங்கள் தடுப்பு (எம்சிஓசிஏ) சிறப்பு நீதிமன்றத்தில் அம்மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு (ATS) தாக்கல் செய்த 4,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையில், "தனக்கென சொந்தமான அரசமைப்பை உடைய தனி இந்து ராஜ்யத்தை உருவாக்குவது" என்ற குறிக்கோளுடன் 2007இல் அபினவ் பாரத் என்ற அமைப்பை புரோஹித் வழி நடத்தினார் என்று கூறப்பட்டுள்ளது.
தனது அடிப்படைவாதக் கருத்துக்களைப் பரப்புவதற்காக அபினவ் பாரத் அமைப்பிற்காகவும் தனக்காகவும் ரூ.21 லட்சம் வரையிலான பெரும் தொகையை இந்த இராணுவ அதிகாரி திரட்டியுள்ளார் என்றும், இந்தத் தொகையானது அபினவ் பாரத் அமைப்பின் பொருளாளர் அஜய் ரஹிர்கார் என்பவர் மூலம், சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளுக்காகவும், வெடிபொருட்களை வாங்குவதற்காகவும் பிற குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் குற்றப்பத்திரிகை கூறுகிறது.
சதிக் கூட்டங்கள் ஜனவரி 2008 முதல் ஃபரிதாபாத், போபால், கொல்கத்தா, ஜபல்பூர், இந்தூர், நாசிக் ஆகிய நகரங்களில் நடந்துள்ளன.
போபாலில் ஏப்ரல் 11, 2008 இல் நடந்த கூட்டத்தில், வடக்கு மராட்டியத்தில் முஸ்லிம்கள் அதிகமுள்ள நகரத்தில் வெடிகுண்டுகளை வைப்பதற்குத் தேவையான வெடிபொருட்களை வழங்கும் பொறுப்பை புரோஹித்தும், அதற்கான ஆட்களை ஏற்பாடு செய்யும் பொறுப்பை சாத்வி பிரக்யா சிங் தாக்கூரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
புரோஹித் தனது காஷ்மீர் பணியில் இருந்து திரும்புகையில் தன்னுடன் ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்தை கொண்டுவந்துள்ளார். பின்னர், கைதாகியுள்ள சுதாகர் சதுர்வேதி மற்றும் தேடப்பட்டு வரும் குற்றவாளி ராம்ஜி கல்சங்கரா ஆகியோருடன் சேர்ந்து புனேவில் உள்ள தனது வீட்டில் வெடிகுண்டுகளைத் தயாரித்துள்ளார் என்று குற்றப்பத்திரிகை கூறுகிறது.
Webdunia
Publish Date: Tue, 20 Jan 2009 (21:00 IST)
Updated Date: Tue, 20 Jan 2009 (20:59 IST)