Publish Date: Tue, 20 Jan 2009 (18:39 IST)
Updated Date: Tue, 20 Jan 2009 (18:39 IST)
மராட்டிய மாநிலம் மாலேகானில் கடந்த ஆண்டு 7 பேரை பலிகொண்ட குண்டு வெடிப்புத் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இந்துத் துறவி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக இன்று குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மராட்டிய மாநிலத் தலைநகர் மும்பையில் உள்ள மராட்டிய மாநில அமைப்பு ரீதியிலான குற்றங்கள் தடுப்பு (எம்சிஓசிஏ) சிறப்பு நீதிமன்றத்தில் 4,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை அம்மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவு (ATS) தாக்கல் செய்த்து.
மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாற்றப்பட்டவர்கள் மீது மராட்டிய மாநில அமைப்பு ரீதியிலான குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்வது பொருந்துமா என்பதை நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்று குற்றம் சாற்றப்பட்டவர்கள் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர்கள் மகேஷ் ஜேத்மலானியும், ஸ்ரீகாந்த் ஷிவாடேயும் கோரினர்.
இதனை எதிர்த்த அரசு வழக்கறிஞர் ரோஹினி சாலியன், அச்சட்டம் சரியாகவே இவ்வழக்கிற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வாதிட்டார்.
அவர்களுடைய கோரிக்கையை பரிசீலித்து நாளை உத்தரவு பிறப்பிப்பதாகத் தெரிவித்தார்.
பெண் துறவியான சாத்வி பிரக்யான் சிங் தாக்கூர், இந்திய இராணுவத்தில் பணியாற்றிவரும் லெப்டினென்ட் கர்னல் பிரசாத் புரோகித் உள்ளிட்ட 11 பேர் மீது மராட்டிய அமைப்பு ரீதியிலான குற்றங்கள் தடுப்பு சட்டம், சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றம் சாற்றப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி மாலேகானில் பிக்கு செளக் என்ற இடத்திலுள்ள மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 7 பேர் கொல்லப்பட்டனர், 70க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.
இக்குற்றச் செயலை சதித் திட்டம் தீட்டி நிறைவேற்றியது அபினவ் பாரத் என்ற அமைப்பு என்பதை மராட்டிய மாநில பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு கண்டுபிடித்தது. இது ஒரு இந்து மத தீவிரவாத நோக்குடன் செயல்பட்டு வந்த அமைப்பு என்றும், இதில் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்டவர்கள் தொடர்புடையவர்கள் என்றும் குற்றம் சாற்றப்பட்டியது.
Webdunia
Publish Date: Tue, 20 Jan 2009 (18:39 IST)
Updated Date: Tue, 20 Jan 2009 (18:39 IST)