பா.ஜ.க. துணைத் தலைவரும், உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான கல்யாண் சிங் இன்று அக்கட்சியில் இருந்து விலகினார்.
இதுதொடர்பாக லக்னோவில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், கட்சியினரால் தாம் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டதாகவும் இதன் காரணமாகவே கட்சியில் இருந்து விலகுவதாகவும் கல்யாண் சிங் தெரிவித்தார்.
தனது ராஜினாமா கடிதத்தை எல்.கே.அத்வானிக்கு தொலைநகலில் அனுப்பி வைத்துள்ளதாகவும், அக்கடிதம் தற்போது அவரது கைக்கு கிடைத்திருக்கும் என்றும் அவர் கூறினார்.
புதிய கட்சி துவக்குவது அல்லது பிற அரசியல் கட்சியில் இணையும் திட்டம் எதுவும் இல்லை என்றும் கல்யாண் சிங் குறிப்பிட்டார்.
மக்களவைத் தேர்தலில் உங்கள் மகனுக்கு கட்சி சார்பில் போட்டியிட அனுமதி அளிக்கப்படவில்லை என்ற காரணத்திற்காக நீங்கள் ராஜினாமா செய்வதாக கூறப்படுவது குறித்த கல்யாண் சிங்கிடம் கேட்கப்பட்டது.
மக்களவைத் தேர்தலில் தன் மகன் அல்லது தமது ஆதரவாளர்கள் யாருக்காகவும் தாம் போட்டியிட அனுமதி கோரவில்லை என்று அவர் பதிலளித்தார்.
கல்யாண் சிங்கின் மகன் சமாஜ்வாடி கட்சியின் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடலாம் என அக்கட்சித் தலைவர் முலாயம் சிங் நேற்று அறிவித்திருந்த நிலையில், பா.ஜ.க.வில் இருந்து கல்யாண் சிங் இன்று விலகுவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.