மும்பை பயங்கரவாதத் தாக்குதலின்போது பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான அஜ்மல் கசாப்பிற்கு பிப்ரவரி 2 ஆம் தேதி வரைக் காவலை நீட்டித்து மும்பை பெருநகரக் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வடக்கு மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி இரயில் நிலையத்தில் நடந்த மோதல் தொடர்பாக அஜ்மல் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த மும்பை பெருநகரக் குற்றவியல் நீதிமன்றக் கூடுதல் தலைமை நீதிபதி என்.என். ஸ்ரீமங்கலே, அஜ்மலை 15 நாட்கள் (பிப்ரவரி 2 வரை) காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
பயங்கரவாதி அஜ்மல் பாதுகாப்புக் காரணங்களால் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவில்லை. அவர் மறைத்துவைக்கப்பட்டுள்ள இடத்திற்கு இன்று 5 ஆவது முறையாக நீதிபதி ஸ்ரீமங்கலே நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக அஜ்மலின் மீது இதுவரை 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. காமா மருத்துவமனை அருகில் நடந்த மோதல் தொடர்பான வழக்கே கடைசியாகப் பதிவு செய்யப்பட்டதாகும்.