காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி நிச்சயம் ஒருநாள் பிரதமர் பதவியை ஏற்பார் என்றும், தற்போதைக்கு மன்மோகன் சிங்தான் காங்கிரஸ் கட்சியின் பிரதமருக்கான வேட்பாளர் என்றும் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் கூறியிருக்கிறார்.
புதுடெல்லியில் உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித்திடம், நாட்டின் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி வருவாரா? என்று கேட்டபோது அவர் இவ்வாறு பதிலளித்தார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் முஸ்லிம்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரித்த போதிலும், மக்களவைத் தேர்தலில் அவர்களின் வாக்குகள் காங்கிரசுக்கு கிடைக்க வேண்டுமானால் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைப்பது அவசியம் என்று அவர் கூறினார்.
வரும் மக்களவைத் தேர்தல் பற்றி குறிப்பிட்ட அவர், இந்தத் தேர்தலில் ராகுல் காந்தி முக்கியப் பங்காற்றுவார் என்று குறிப்பிட்டார்.
ராகுல் பிரதமராவது குறித்து, அவரோ அல்லது அவரது தாயார் சோனியா காந்தியோதான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறிய குர்ஷித், தற்போது ராகுல் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது பற்றி அவருக்கே தெரியும் என்றார்.
என்றாலும், என்றாவது ஒருநாள் அவர் பிரதமராவது திண்ணம், அதற்குரிய நேரம் வரும் என்றும், அப்படி பிரதமரானால் மிகவும் இளமையான இந்திய பிரதமராக இருப்பார் என்றும் கூறினார்.
இப்போதைக்கு காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் ராகுல் உள்ளார்; அவரது முயற்சியை நாங்கள் பாராட்டுகிறோம் என்றார் குர்ஷித்.
இப்போது பிரதமராக ஒருவர் இருக்கும் நிலையில், புதிதாக பிரதமர் பதவிக்கான வேட்பாளரை அறிவிக்க வேண்டியதில்லை என்றும், மன்மோகன் சிங்கைப் பொருத்தவரை மரியாதைக்குரிய மனிதர் என்றும் அவர் கூறினார்.
பல இன்னல்களுக்கு மத்தியில் கட்சியையும், அரசையும் பிரதமர் வழிநடத்திச் சென்றுள்ளார் என்றார் அவர்.