நாட்டின் முக்கிய பெருநகரங்களை (மெட்ரோ சிட்டி) ஜப்பான் நாட்டின் புல்லட் ரயில்கள் மூலம் இணைக்க திட்டமிடப்பட்டிருப்பதாக ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் கூறியிருக்கிறார்.
சிங்கப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை அளிக்குமாறு விரைவில் உலகளாவிய நிறுவனங்களுக்கு டெண்டர் கோரப்படும் என்றும், அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாம் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
முன்னதாக இந்த வார தொடக்கத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து கியோட்டோ நகருக்கு லாலு பிரசாத் அந்நாட்டின் அதிவேக புல்லட் ரயிலில் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மிகவும் பரபரப்பான ரயில் போக்குவரத்துக்கு இடையே அதிவேக புல்லட் ரயில்களை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஜப்பான் ரயில்வே அதிகாரிகளுடன் லாலு விவாதித்தார்.
இந்தியாவில் சரக்கு ரயில்களுக்கான தனியான வழித்தடம் (Freight Corridor Project) அமைக்கும் திட்டத்திற்கு 4 பில்லியன் டாலர் கடன் பெறுவதற்கான வழிமுறைகளை எளிதாக்குவதற்காக லாலு பிரசாத் ஜப்பான் சென்றிருந்தார்.
முதல்கட்டமாக புதுடெல்லியையும், மும்பையையும் இணைக்கும் வகையில் தனியான சரக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டம் தொடங்கப்படுகிறது.
2ஆவது கட்டமாக மும்பை - சென்னை இடையேயும், அடுத்ததாக சென்னை - ஹவுரா இடையேயும் புதிய ரயில்பாதை அமைக்கப்படும் என்று லாலு பிரசாத் குறிப்பிட்டார்.
சரக்கு போக்குவரத்திற்காக தனியான ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டால், தற்போது பயணிகள் ரயில் போக்குவரத்தில் ஏற்படும் நெருக்கடி குறைவதுடன் சரக்குகளை கொண்டு சேர்க்கும் நேரமும் குறையும் என்று அவர் கூறினார்.
இதற்காக ஜப்பான் நாட்டிடம் இருந்து கடன் பெறும் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜப்பான் மற்றும் சிங்கப்பூருக்கு லாலு பிரசாத்துடன் சென்றுள்ள ரயில்வே இணையமைச்சர் ஆர். வேலு, ஜப்பானுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், கடன் தொடர்பான பேச்சுகள் முன்னிலை பெற்றதாகவும் கூறினார்.
ஜப்பான் நாட்டிடம் இருந்து எந்த மாதிரியான தொழில்நுட்ப உதவிகளைப் பெற முடியும் என்பது பற்றியும் பேசப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.