நமது நாட்டில் (மும்பை) தாக்குதல் நடத்தியுள்ள குற்றவாளிகளை இந்தியச் சட்டப்படிதான் தண்டிக்க வேண்டும். எனவே அவர்களை உடனடியாக இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தினார்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களில் தொடர்புடைய குற்றவாளிகள் இந்திய அரசிடம் ஒப்படைக்காவிட்டாலும் பரவாயில்லை, அவர்களிடம் பாகிஸ்தான் அரசாவது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பிரணாப் முகர்ஜி கூறியதாகச் செய்திகள் வெளியாகின. இதையடுத்து மத்திய அரசு தனது நிலையில் இருந்து பின்வாங்கி விட்டதாகக் கருத்துக்கள் பரவின.
இதுகுறித்து, தலைநகர் டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் கேட்டதற்கு, "நமது நாட்டில் தாக்குதல் நடத்தியுள்ள குற்றவாளிகளை நமது நாட்டுச் சட்டத்தின்படிதான் தண்டிக்க வேண்டும். குற்றவாளிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையில் தளர்வு என்ற பேச்சிற்கே இடமில்லை" என்றார்.
பயங்கரவாதத் தாக்குதல்களுக்குக் காரணமான குற்றவாளிகளைக் கைது செய்து அவர்களிடம் பாகிஸ்தான் அரசு உரிய முறையில் வெளிப்படையாக விசாரணை நடத்துவது குறித்து எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் குற்றவாளிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும், அவர்கள் இங்குதான் தண்டிக்கப்பட வேண்டும் என்றுதான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தான் கூறியதாகவும் பிரணாப் முகர்ஜி தெளிவுபடுத்தினார்.