மனித வளர்ச்சிக்கு அத்தியாவசியமான அடிப்படை மேம்பாட்டுத் தேவைகளை நிறைவு செய்வதில் நாம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.
மாவட்ட திட்டக்குழுத் தலைவர்களின் முதலாவது மாநாட்டைத் தலைநகர் டெல்லியில் இன்று துவக்கி வைத்துப் பேசுகையில் இவ்வாறு வலியுறுத்திய பிரதமர், வேற்றுமை மற்றும் பாகுபாடு ஆகியவற்றைக் குறைக்கும் பணிகளில் உள்ள சவால்களே நம் முன்னால் உள்ள மிக முக்கியப் பிரச்சனைகள் என்று நான் கருதுகிறேன் என்றார்.
ஊட்டச்சத்து குறைவை நீக்குதல், நோய்களுக்கு எதிராகப் போராடுதல், அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்குதல், தரமான கல்வி வழங்குதல், திறமையாக குடிமக்களை உருவாக்கி அவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்குதல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் ஆகியவை உள்ளிட்ட அடிப்படை வளர்ச்சிப் பணிகளில் கவனம் தேவைப்படுகிறது என்றார் பிரதமர்.
ஊரக குடிநீர் வழங்கல் உள்ளிட்ட பணிகள் மாவட்ட அளவில் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், நகர்ப் புறங்களில் நிறைவேற்றப்பட்டு வரும் நடுத்தரக் காலத் திட்டங்கள் தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தேசத்தின் முன்னோக்கிய பயணத்தில் உள்ளூர் நிர்வாகங்கள் ஒரு மறைமுகக் கதாநாயகர்கள் என்று குறிப்பிட்ட பிரதமர் பஞ்சாயத்துக்களுக்கு உண்மையான அதிகாரங்கள் கிடைக்கச் செய்யும் நடவடிக்கைகள் வேண்டுமானால் சமமற்று இருக்கலாம், ஆனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய காலத்தில் தேர்தல் நடத்துவதன் மூலம் ஜனநாயகத்தை வேரூன்றச் செய்வதில் வெற்றிபெற்றுள்ளோம் என்றார்.