வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா வத்ரா போட்டியிட மாட்டார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏதாவதொரு மக்களவைத் தொகுதியில் பிரியங்கா போட்டியிடக்கூடும் என்று அண்மையில் தகவல் வெளியானது.
ஆனால் இதுபற்றி காங்கிரஸ் கட்சியில் முக்கியத் தலைவராகவும், சோனியா காந்தியின் நம்பிக்கையைப் பெற்றவராகவும் விளங்கும் தலைவர் ஒருவர் கருத்து கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கைப் பொருத்தவரை சோனியா, ராகுல் காந்தியை முன்னிறுத்தியே இருக்கும் என்று குறிப்பிட்டார்.
மேலும் பிரதமர் மன்மோகன் சிங்கும் தேர்தலில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று அவர் கூறினார்.
உத்தரப்பிரதேசத்தில் தலித் மக்களுடன் ராகுல் காந்தி காட்டி வரும் நெருக்கமும் மக்களவைத் தேர்தலில் பிரதிபலிக்கக்கூடும் என்றும், சாதாரண மக்களை காங்கிரஸ் கட்சியின் பக்கம் திருப்புவதற்காகவும் ராகுல் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
ராகுல்காந்திக்கு உள்ள செல்வாக்கு பற்றி கேட்டபோது, தேர்தல் வரை பொறுத்திருந்து பாருங்கள் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் பதிலளித்தார்.
கடந்த செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசுக்கு மக்களிடத்தில் இருந்த நிலையை விடவும் தற்போது, நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
மும்பை தாக்குதல்களுக்குப் பிறகு நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களில் டெல்லி, ராஜஸ்தானில் காங்கிரஸ் அடைந்துள்ள வெற்றி தொண்டர்களிடத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவைக் காட்டிலும், காங்கிரஸ் கட்சி சுமார் 25 இடங்கள் அதிகம் கைப்பற்றும் என்று தெரிய வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.