தாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றும், கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுவிக்கும் வரை பேச்சுவார்த்தைக்கு கூட வரமாட்டோம் என்றும் அகில இந்திய சரக்கு போக்குவரத்து சங்கத்தின் தலைவர் ரமேஷ் அகர்வால் கூறியுள்ளார்!
சரக்கு லாரி ஓட்டுநர்கள் பல இடங்களில் வேலைக்கு திரும்பியதையடுத்து சரக்கு போக்குவரத்து முன்னேற்றமடைந்துள்ளது என்று மத்திய போக்குவரத்துத் துறைச் செயலர் பிரம் பட் கூறியுள்ளதையடுத்து, யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரமேஷ் அகர்வால் இவ்வாறு கூறியுள்ளார்.
மும்பை, பூனே, விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளில் சரக்கு லாரி ஓட்டுநர்கள் வேலைக்கு திரும்பியுள்ளதாக செயலர் பிரம் பட் கூறியதையடுத்து, அந்தப் பகுதி லாரி உரிமையாளர்களுடன் தொடர்பு கொண்டு பேசியதாகவும், பட் கூறியுள்ள கருத்தை அவர்கள் மறுத்ததாகவும் கூறிய ரமேஷ் அகர்வால், மத்திய அரசு வேண்டுமென்றே பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது என்றும் கூறியுள்ளார்.
அகில இந்திய சரக்கு போக்குவரத்துத் சங்கத்தின் பொதுச் செயலர் ரமேஷ் குலாதி உள்ளிட்ட எஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யும் வரை பேச்சுவார்த்தைக்கு கூட வரப்போவதில்லை என்று ரமேஷ் அகர்வால் கூறியுள்ளார்.