மத்திய அரசின் கடும் நடவடிக்கைகளை அடுத்து பொதுத் துறை எண்ணெய் நிறுவன அதிகாரிகளின் வேலை நிறுத்தம் முடிவிற்கு வந்தது.
இந்திய எண்ணெய் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகள் இன்று மாலை பணிக்குத் திரும்பினர். மற்ற நிறுவனங்களிலும் அடுத்தடுத்து அதிகாரிகள் பணிக்குத் திரும்பி வருகின்றனர் என்று மத்தியப் பெட்ரோலியச் செயலர் ஆர்.எஸ். பாண்டே தெரிவித்தார்.
கடந்த மூன்று நாட்களாக நீடித்த அதிகாரிகளின் வேலை நிறுத்தத்தால் எண்ணெய் சுத்திகரிப்புப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இதனால், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
முன்னதாக, எண்ணெய்த் துறை அதிகாரிகள் சங்கத்துடன் மத்திய அரசு இன்று காலை நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது. இதையடுத்து பெட்ரோலியச் சுத்திகரிப்புப் பணிகளை இராணுவத்தின் உதவியுடன் மேற்கொள்வது என்று மத்திய அரசு ஆலோசித்திருந்தது.
இதையடுத்து நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அதிகாரிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோராவிற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இந்நிலையில், எண்ணெய் நிறுவன அதிகாரிகளின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.
மேலும், மத்திய அரசிடம் அடுத்த 20 நாட்களுக்குத் தேவையான பெட்ரோலும், 14 நாட்களுக்குத் தேவையான டீசலும், 12 நாட்களுக்குத் தேவையான சமையல் எரிவாயுவும் இருப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தட்டுப்பாடு நீடிக்கும் அபாயம்!
இதற்கிடையில் லாரி உரிமையாளர்கள் சங்கப் போராட்டம் இன்னும் தொடருவதால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நீடிக்கும் என்று கருதப்படுகிறது. பெட்ரோல், டீசல் டேங்கர் லாரிகளும், சமையல் எரிவாயு டேங்கர் லாரிகளும் இயங்கவில்லை.
லாரி உரிமையாளர்கள் மீது எஸ்மா உள்ளிட்ட பல்வேறு சட்டங்களின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதன்படி ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. லாரிகளைப் பறிமுதல் செய்து இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.