வேலை நிறுத்தத்தைத் தொடரும் பொதுத் துறை எண்ணெய் நிறுவன அதிகாரிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோராவை மத்திய அமைச்சரவை அறிவுறுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்துச் செய்தியாளர்களிடம் விளக்கிய அமைச்சர் ப. சிதம்பரம், "வேலை நிறுத்தத்தை இரும்புக்கரம் கொண்டு கையாளுமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் சுத்திகரிப்பு ஆலைப் பணிகளும், பெட்ரோலியப் பொருட்கள் வினியோகப் பணிகளும் இராணுவம் மூலம் மேற்கொள்ளப்படும்" என்றார்.
"எண்ணெய் நிறுவன அதிகாரிகளின் வேலை நிறுத்தத்தால் நமது நாட்டு மக்கள் படும் அவஸ்தைகள் குறித்து நீங்களும் நானும் கவலைப்படுகிறோம். இதை உணர்ந்து அதிகாரிகள் தங்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். தேவைப்பட்டால் அதிகாரிகளின் ஊதிய உயர்வு விவகாரம் குறித்து இன்று நான் அவர்களுடன் பேச்சு நடத்தத் தயார்" என்றும் சிதம்பரம் குறிப்பிட்டார்.
முன்னதாக பெட்ரோலியப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டால் நிலவும் நெருக்கடி குறித்து அமைச்சர் முரளி தியோராவும், பெட்ரோலியச் செயலர் ஆர்.எஸ். பாண்டேவும் அமைச்சரவைக்கு விளக்கினர்.