ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சு தோல்வியடைந்தது.
பொதுத் துறை எண்ணெய் நிறுவன அதிகாரிகள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பெட்ரோல், டீசல் வினியோகம் தடைபட்டு நாடு முழுவதும் வாகனப் போக்குவரத்து முடங்கியுள்ளது.
இதையடுத்து, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் சங்க நிர்வாகிகளுடன் மத்திய அரசு பேச்சு நடத்தியது. இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து பேச்சு வார்த்தை தோல்வி அடைந்து இருப்பதாக மத்திய பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா அறிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "பிரதமர் வேண்டுகோள் விடுத்தும் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் வேலை நிறுத்தத்தை திரும்பப் பெறவில்லை. எனவே இனி அவர்களுடன் எந்த பேச்சும் நடத்த மாட்டோம். தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்'' என்றார்.