லாரிகள் வேலை நிறுத்தத்தால் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்கக் கிடங்குகளில் இருந்து பெட்ரோலியப் பொருட்களைச் சில்லறை விற்பனை நிலையங்களுக்குக் கொண்டு செல்லும் பணிக்கு இராணுவத்தினர் அழைக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.
மத்திய அமைச்சரவைச் செயலர் கே. எம். சந்திரசேகரின் கீழ் இயங்கும் நெருக்கடி நிலைச் சமாளிப்புக் குழு இன்று தலைநகர் டெல்லியில் கூடி, கிடங்குகளில் இருந்து பெட்ரோலியப் பொருட்களைச் சில்லறை விற்பனை நிலையங்களுக்குக் கொண்டு செல்லும் பணியில் இராணுவத்தை ஈடுபடுத்துவது குறித்து ஆலோசித்தது.
இருந்தாலும், இந்நடவடிக்கையை இறுதிகட்டமாக மேற்கொள்வது என்றும், அதற்கு முன்னர் லாரி உரிமையாளர்களைச் சமாளிப்பது மற்றும் எண்ணை நிறுவன அதிகாரிகளை மீண்டும் வேலைக்கு வரச்செய்வது உள்ளிட்ட ஏனைய நடவடிக்கைகளை மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில் பொதுத் துறை எண்ணெய் நிறுவன அதிகாரிகளில் வேலை நிறுத்தம், டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் ஆகியவற்றால் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றிற்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பெட்ரோல் சில்லறை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. விமானப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் 425 பெட்ரோல் நிலையங்களும் (மூன்றில் இரண்டு பங்கு), மும்பையில் 60 விழுக்காடு பெட்ரோல் நிலையங்கம், சென்னையில் 70 விழுக்காடு பெட்ரோல் நிலையங்களும் இருப்பு இல்லை என் பலகைகளுடன் மூடப்பட்டுள்ளன.