மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளை ஒப்படைக்கும் விவகாரத்தில் பாகிஸ்தான் மீது இந்தியா 5 நாட்களுக்குள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லை என்றால் மத்திய அரசிற்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக்கொள்வோம் என்று சமாஜ்வாடி எச்சரித்துள்ளது.
மும்பைத் தாக்குதல் தொடர்புடைய பயங்கரவாதிகளை ஒப்படைக்கக் கோரும் விவகாரத்தில், பாகிஸ்தானிற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மெத்தனத்துடன் நடந்து வருவதாகச் சமாஜ்வாடி கட்சி குற்றம்சாற்றி வருகிறது.
காங்கிரசுடன் கொண்டுள்ள கூட்டணியை முறித்துக் கொள்ளவேண்டும் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் வற்புறுத்தி வருகின்றனர். இதையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவ், பொதுச் செயலர் அமர்சிங் ஆகிய இருவரும் சந்தித்துப் பேசினர்.
இந்நிலையில், புது டெல்லியில் இன்று அவசரமாகக் கூடிய சமாஜ்வாடி கட்சி நிர்வாகிகள் குழுக் கூட்டத்தில, மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக்கொள்வது தொடர்பாக கட்சித் தலைவர்கள் விவாதித்தனர்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமர்சிங், "மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகளை ஒப்படைக்கும் விவகாரத்தில் பாகிஸ்தான் மீது மத்திய அரசு 5 நாட்களுக்குள் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால், வருகிற 14ஆம் தேதி கூடும் கட்சியின் தேசிய செயற்குழுவில் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்குவது குறித்து முடிவெடுப்போம்.
ஏனென்றால் அன்றுதான் குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் டெல்லி திரும்புகிறார். அவர் டெல்லியில் இல்லாத நிலையில் எந்த நடவடிக்கையும் எடுக்க நாங்கள் விரும்பவில்லை. அதுவரை பொறுமையாக இருக்கும்படி எங்கள் கட்சித் தலைவர்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்" என்றார்.