மும்பை தாக்குதலின்போது பிடிபட்ட ஒரே பயங்கரவாதியான அஜ்மல் கசாப்பின் குடியுரிமை குறித்து முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வரும் பாகிஸ்தானிற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நடந்து வரும் அயல்நாடு வாழ் இந்தியர் மாநாட்டில் பேசிய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, "அவர் (அஜ்மல்) எங்கிருந்து வந்தார், இராணுவம் மற்றும் ஆயுதப் பயிற்சிகளை எங்கிருந்து பெற்றார். அவரை வழிநடத்தியவர்கள் எங்கு உள்ளனர் என்ற விவரங்களை எல்லாம் அவரே எங்களிடம் கூறியுள்ளார். ஆனாலும், பாகிஸ்தான் அரசு முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது துரதிர்ஷ்டவசமானது" என்றார்.
அமெரிக்காவில் உலகவர்த்தக மையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு நடந்து வரும் தாக்குதல்கள் அனைத்தும் ஒரே குறிக்கோளுடன் உள்ளன என்று தான் நம்புவதாகத் தெரிவித்த அவர், இத்தகைய தாக்குதல்களைத் தடுத்துக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.