ஜார்கண்ட் மாநில முதல்வரும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவருமான சிபு சோரன் தனது பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்கு வெற்றிபெற்றாக வேண்டிய இடைத் தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.
தமர் தொகுதியில் போட்டியிட்ட சிபு சோரன் தனக்கு எதிராகப் போட்டியிட்ட, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஆளும் கூட்டணியில் உள்ள ஜார்கண்ட் கட்சியின் ராஜா பீட்டரிடம் 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மத்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவை இடதுசாரி கட்சிகள் விலக்கிக் கொண்டதையடுத்து, மக்களவையில் அரசிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்தை ஆதரிப்பதற்காக, ஜார்க்கண்ட் மாநில முதல்வர் பதவியை சிபு சோரன் கேட்டுப் பெற்றார்.
இதையடுத்து, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை உறுப்பினராவதற்காக தமர் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் சிபு சோரன் போட்டியிட்டார்.
இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. துவக்கத்தில் இருந்தே பின்தங்கியிருந்த சிபுசோரன், வாக்கு எண்ணிக்கை முடிவில், 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.